• Fri. May 3rd, 2024

சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பி.எஸ் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம்

Byவிஷா

Mar 23, 2024

பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஓபிஎஸ் குழு தனித்து விடப்பட்டிருப்பதுடன், மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதால், அவர் அதிமுகவில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பதவியை இழக்கும் அபாயம் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலம் என்பதால் தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற அரசியல் கட்சிகள் முயன்று வருகின்றன.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் என இந்த முறை நான்குமுனை போட்டி நிலவுகிறது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிக்கே நேரடி போட்டி நிலவினாலும், சில தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி கடும் சவால் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கன்னியாகுமரி, தேனி, கோவை, ராமநாதபுரம், நீலகிரி ஆகிய தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. கன்னியாகுமரியை பொறுத்தவரையில், பாஜக பலமாக உள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது. அதேபோல, தேனி அ.தி.மு.க.வின் கோட்டையாக கருதப்படுகிறது.

கடந்த 2019 தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 39 தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் திமுக கூட்டணியால் தேனியில் வெற்றி பெற முடியவில்லை. கோவையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனும் நேரடியாக களம் காண்கின்றனர். எனவே, இங்கும் மும்முனை போட்டி நிலவ வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இந்த தொகுதிகளை தவிர்த்து இந்த தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது ராமநாதபுரம். ஏன் என்றால், முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம், இங்கு நேரடியாக களம் காண்கிறார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அவர், ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஏற்கனவே, அரசியல் ரீதியாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பன்னீர்செல்வம், தற்போது சுயேச்சையாக போட்டியிடுவதால் பெரும் சட்ட சிக்கலை சந்தித்துள்ளார்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துகொண்டு சுயேச்சையாக போட்டியிடுவதால் அவர் எல்எல்ஏ பதவியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். அவருக்கு எதிராக கட்சி தாவல் தடை சட்டம் பாயலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

மக்கள் பிரதிநிதியாக (எல்எல்ஏ, எம்பி) இருக்கும் ஒருவரை இரண்டு வழிகளில் பதவி நீக்கம் செய்யலாம். ஒன்று, எந்த கட்சியில் இருந்து மக்கள் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அந்த கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும்போது ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

இரண்டு, கட்சி கொறடாவின் உத்தரவுகளை மீறி செயல்பட்டால் பதவி நீக்கம் செய்யப்படலாம். இந்த இரண்டு விதிகளை கருத்தில் எடுத்து கொண்டு பார்த்தால், சுயேச்சையாக போட்டியிடுவதால் மட்டுமே பன்னீர்செல்வத்தை தகுதி நீக்கம் செய்து விட முடியாது என்கிறார் முன்னாள் மக்களவை செயலாளர் பி.டி.டி ஆச்சாரி.

இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், “கட்சியில் இருந்து நீக்கிவிட்டு எதன் அடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும். அவர் கட்சி கொறடா உத்தரவுகளை மீறி செயல்படவில்லை. கட்சி தாவல் தடை சட்டத்தை பொறுத்தவரையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும், மக்கள் பிரதிநிதியாக தொடரும் வரை அவர் கட்சி உறுப்பினராக தொடர்வார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *