• Tue. Feb 7th, 2023

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில்கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் விழா நாட்களில் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ஆகியவை கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதால் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் வழக்கம்போல் மாட வீதியில் நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காமதேனு வாகனத்தில் மாட வீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து அம்மன் மாட வீதி உலா நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். உற்சவ நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணியில் இருந்து 7 மணிக்குள் சாமி சன்னதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அன்று காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 6-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *