விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சங்கரபாண்டியாபுரம், சாமி நத்தம், கிருஷ்ணாபுரம், மார்க்க நாதபுரம், சிப்பிபாறை, கணஞ்சாம் பட்டி, கோமாளிபட்டி, அன்பின் நகரம், வல்லம் பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிடபட்டு உள்ளது.

சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மக்காச்சோளம் தோட்டத்தில் ஏராளமான களைகள் வளர்ந்துள்ளன. தற்போது களைகளை அப்புறப்படுத்தும் பணி ,களைக்கொல்லி மருந்து அடிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து கணஞ்சாம்பட்டி விவசாயி தங்கசாமி கூறியது
இப்பகுதியில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. தோட்டத்தில் அதிக அளவு களை வளர்ந்து உள்ளதால் அதனை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கு ரூபாய் 300 கூலியாக வழங்கப்படுகிறது. இருப்பினும் போதுமான தொழிலாளர்கள் கிடைக்காமல் சிரமப்பட வேண்டிய நிலை இருந்து வந்தது. மக்காச்சோள பயிருக்கான காப்பீட்டு திட்டம் இன்னும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. எதிர்பாராத விதமாக மக்காச்சோளம் சேதமடைந்து நஷ்டம் அடைந்தால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் நிலை உள்ளது. அவ்வாறு இன்சூரன்ஸ் தொகை கிடைக்காவிட்டால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் உடனடியாக மக்காச்சோள பயிருக்கான காப்பீட்டு திட்டம் அறிவிக்க வேண்டும் என கூறினார்.
