மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார். 46 வயதான புனித், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கர்நாடகாவின் முன்னணி நடிகரான அவரது நினைவிடம் அமைந்துள்ள காண்டிவரா மைதானத்தில் தொடர்ச்சியாக இப்போதும்கூட ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அதோடு, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதால் கடந்த 15 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் கண்தானம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கன்னட திரைப்பட வர்த்தக சபை சார்பில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு புனித் ராஜ்குமாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.