தொலைக்காட்சியில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றில், அசாமைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவரை “மோமோ”, “சௌமைன்” மற்றும் “கிப்பரிஷ் சைனீஸ்” என்ற வார்த்தைகளுடன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ராகவ் ஜுயல் அறிமுகப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பேச்சுகள் அடங்கிய கிளிப்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் இந்த காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், “பிரபல ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர் கவுகாத்தியைச் சேர்ந்த இளம் பங்கேற்பாளர் ஒருவருக்கு எதிராக இனவெறிப் பேச்சு வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது என் கவனத்துக்கு வந்தது. இது வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இனவாதத்திற்கு எமது நாட்டில் இடமில்லை, அதனை நாம் அனைவரும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்” என தெரிவித்தார்
மேலும் அசாம் நெட்டிசன்கள், அஸ்ஸாம் மக்கள் சீனர்கள் அல்ல, ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எப்போதும் இனவெறி கருத்துகளை வெளியிடுகின்றன. இது எப்போது நிறுத்தப்படும்? என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு தெளிவுபடுத்தலை வெளியிட்ட ராகவ் ஜுயல், “சரியான சூழல் இல்லாமல் இந்த கிளிப்பை பார்ப்பது நியாயமற்றது. அந்த போட்டியாளர் நிகழ்ச்சிக்கு வந்தபோது, சீன மொழி பேசும் திறமை தனக்கு இருப்பதாக அறிவித்தார். எனது பேச்சு அதன் அடிப்படையில் அமைந்தது” என்று ராகவ் ஜூயல் கூறினார்