காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் ரூ.9 ஆயிரம் கோடியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில், தமிழக அரசு, மேகதாது திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை கண்டித்து கர்நாடக சட்டசபையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், டெல்லி சென்று ஜல்சக்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்துவதாக பசவராஜ் பொம்மை கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று, கர்நாடகா முதல்வர் டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவரது அமைச்சரவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அமைச்சரவையில் புதிய முகங்களை சேர்க்கும் வகையில், ஒரு சிலரை பதவி நீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சி தலைமை தான், அமைச்சரவை விரிவாக்கமா அல்லது மறுசீரமைப்பா என்பதை முடிவு செய்யும் என தெரிகிறது.
அவர் மத்திய அமைச்சர்களையும், பாஜக உயர் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளார். டெல்லிக்கு செல்லும் பசுவராஜ் பொம்பையின் 2 நாள் பயணத்தின் போது, மேகாதாது அணை தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகிறது. அவருடன், நீர்வளத் துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல்-வும் உடன் சென்றுள்ளது அதை உறுதிப்படுத்துகிறது.