கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை, ஓய்தாலும் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 6-வது நாளாக இன்றும் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 4000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5-நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்தது. இந்நிலையில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டியுள்ள கடற்பகுதிகள் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 40-முதல் 50-கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் எனவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுக பகுதிகளிலும் கனமழை பெய்து வந்த நிலையில், இந்த மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு ஆழ் கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் குளச்சல், முட்டம், மண்டைக்காடு, குறும்பனை, தேங்காய்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் கனமழை ஓய்ந்த நிலையிலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. எனவே 6-வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் பாதுகாப்பாக கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.