• Thu. Jun 20th, 2024

தி.மு.க.வில் ஓரங்கட்டப்படும் கனிமொழி..!

Byவிஷா

Nov 27, 2021

திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியை கட்சி மேலிடம் தொடர்ந்து ஓரங்கட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்திருப்பதுதான் ஹைலைட்டான விசயமே!

10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து, முந்தைய திமுக ஆட்சிகாலத்தில் நடைமுறையில் இருந்த திட்டங்களை மீண்டும் ஒவ்வொன்றாக கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், திமுக மகளிரணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியின் எண்ணத்தில் உருவான நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான சென்னை சங்கமம் நிகழ்ச்சி மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


மாநில அரசின் சுற்றுலாத் துறையின் முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பொங்கல் பண்டிகையின்போது நாட்டுப்புற கலை விழாவை நடத்துவதற்கான சாத்தியங்களை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.
இதனைத் தொடர்ந்து வருகின்ற பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் சென்னை சங்கமம் விழாவை மீண்டும் நடத்த வேண்டும் என எம்.பி கனிமொழியை பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தினர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் பேசிய கனிமொழி, சென்னை சங்கமம் விழாவை நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்து, அரசிடம் இருந்து சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கோயில் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்படாமல் இருப்பதால், கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில், கனிமொழி அளித்து இருந்த வாக்குறுதி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதையடுத்து, ஸ்டாலின் முதல்வரான பின்னர் வரும் முதல் பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை சங்கமம் விழா கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது குறித்து அண்மையில் அமைச்சர்கள் மட்டத்திலும், மேல்மட்ட அளவிலும் பேச்சுவார்த்தை நடந்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அது தொடர்பான ஆலோசனையில் கனிமொழி இடம்பெறவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து பேசிய திமுகவின் முக்கிய மகளிரணி பிரமுகர்.,
சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த இலங்கைத் தமிழர் நலவாரிய குழுவில் கனிமொழி இடம்பெறாதது வருத்தம் அளித்தது. தற்போது சென்னை சங்கமம் மீண்டும் பிரமாண்டமாக நடத்தப்படும் என்று தலைமையில் பேசிக்கொள்வதாக அறிந்தேன்.

அதிலும் கூட, இதுவரை கனிமொழியுடன் அலோசனை செய்ததாகத் தெரியவில்லை. சென்னை சங்கமம் என்றாலே நம் நினைவிற்கு வருவது கனிமொழிதான். தமிழ் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் அவர் வைத்திருந்த அளவில்லாத ஆர்வத்தின் வெளிப்பாடுதான் சென்னை சங்கமம். ஆனால் அவரையே சென்னை சங்கமத்திலிருந்து பிரிப்பது தாயையும் பிள்ளையும் பிரிப்பது போன்றதாகும்” என்றார்.


கலைஞரின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, கொள்கைகளை தெளிவாக எடுத்துக்கூறும் திறமை, கட்சியனரை, பொது மக்களை கனிவுடன் அணுகும் பாங்கு போன்றவை கனிமொழிக்கு நல்ல இமேஜை கொடுத்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, திமுகவுக்காக அவர் மேற்கொண்ட பிரசாரங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகள் தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கி உயர முக்கிய காரணமாகவும் இருந்தது.


ஆனால், அண்மைக்காலமாகவே கனிமொழி ஓரங்கட்டப்படுவதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கலைஞருக்கு வாரிசுகள் பலர் இருந்தாலும், அரசியல் வாரிசுகளாக அறியப்படுபவர்கள் ஸ்டாலினும், கனிமொழியும்தான். அழகிரி ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஸ்டாலின் முதல்வரான நிலையில், கனிமொழி டெல்லி அரசியலில் உள்ளார். ஆனால், கனிமொழியை மாநில அரசியலுக்குள், குறிப்பாக, சென்னைக்குள் கொண்டு வரக்கூடாது என்பதிலும், ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதியை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் ஸ்டாலினின் குடும்பத்தினர் மிகவும் கவனமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


அதனால்தான், சென்னைக்குள் ஏதேனும் ஒரு மக்களவை தொகுதியை ஒதுக்காமல், தெற்கு பக்கம் தூத்துக்குடியை கனிமொழிக்கு ஒதுக்கியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அழகிரியோடு சேர்ந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியும் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கனிமொழி வெளிச்சம் பாய்ச்சுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர். திமுகவினுடைய தெற்கு முகமாக கனிமொழி பார்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், அதுபோன்ற சாத்தியக்கூறுகள் இதுவரை எதுவும் தென்படவில்லை.


ஒன்று கனிமொழி வடக்கே டெல்லியில் இருக்க வேண்டும் இல்லையென்றால் தெற்கே தூத்துக்குடியில் இருக்க வேண்டும். சென்னைக்குள் சங்கமித்து விடக்கூடாது என்ற ஸ்டாலின் குடும்பத்தினரின் கணக்கே சென்னை சங்கமம் அலோசனை கூட்டத்தில் கனிமொழி சங்கமிக்காததற்கு காரணமாக இருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கும் அரசியல் விமர்சகர்கள், இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கனிமொழியை தூத்துக்குடிக்குள் மட்டுமே முடக்க ஏதேனும் சதி நடக்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *