• Tue. Apr 30th, 2024

கள்ளந்திரி ,மேலூர், திருமங்கலம்,58 கால்வாய் ஆகிய பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும்… சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை..,

மதுரை மாவட்டத்தில் கள்ளந்திரி, மேலூர்,திருமங்கலம் ,58 கால்வாய் ஆகிய பகுதிகளுக்கு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீரை திறந்து விடவேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் நேரில் சென்று மனு அளித்து தண்ணீரை திறக்க வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது

உசிலம்பட்டி பகுதியில் 58 கால்வாய் திட்டம் என்பது 40 ஆண்டு கால கோரிக்கையாகும்.ஏற்கனவே எடப்பாடியார் ஆட்சியில் இருந்தபோது மூன்று முறை தண்ணீர் திறக்கப்பட்டது.தற்போது திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் போராடித்தான் தண்ணீரை பெற வேண்டி உள்ளது.

 வைகை அணையில் 71 அடி நீர் நிரம்பி உள்ளது 67 அடி இருந்தாலே போதும் 58 கால்வாய்க்கு தண்ணீரை திறக்கலாம்.தற்போது 58 கால்வாய்க்கும், கள்ளந்திரி பகுதியில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் இருபோகப் பாசனத்திற்கும், மேலூரில் உள்ள 85 ஆயிரம் ஏக்கர் ஒருபோக பாசனத்திற்கும், திருமங்கலம் பகுதியில் உள்ள 19,500 ஒருபோகபாசனத்திற்கும் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 வைகை அணையில் 6,000 மில்லியன் கன அடி இருந்தாலே தண்ணீர் திறக்கலாம் தற்போது 9000 மில்லி கன அடி உள்ளது தற்போது 120 நாள் தண்ணீர் திறந்தால் கூட தண்ணீர் பற்றாகுறை வராது ஆகவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு தண்ணீரை திறந்து விட வேண்டும்.

 அதேபோல் தற்போது முதியோர் ஓய்வூதிய தொகை கடந்த இரண்டு மாதமாக வரவில்லை என்று தொடர்ந்து மக்கள் மத்தியில் புகார் வருகிறது. ஏனென்றால் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டதில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறிக் கொள்கிறார்கள் இதை அரசு உடனே சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 அதேபோல் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 150 நாட்களாக உயர்த்தி வழங்குவோம் ,அதேபோல் 260 சம்பளத்தை 300ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று திமுக தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு அந்த 260 ரூபாய் சம்பளத் தொகையை கடந்த 10 வாரமாக நிலுவையில் உள்ளது அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தற்போது மழைக்காலங்களில் பல்வேறு விஷ காய்ச்சல், மர்ம காய்ச்சல், டெங்கு போன்ற காய்ச்சல் பரவி குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடத்துமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 அதேபோல் மாநகராட்சி சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக உள்ளது அதை தற்போது மண்ணை போட்டு மூடுகிறார்கள் இது கண்துடைப்பு நாடகம் இதற்கு நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும்.

மேலும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் அமெரிக்கன் படைப்புழுகளால் பயிர் சேதம் அடைந்தபோது விதியை தளர்த்தி பேரிடர் நிவாரணத்திலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது.

 அதேபோல் 5 ஏக்கர் மேல் இருந்தால் நிவாரணம்  கிடையாது ஆனால் எடப்பாடியார் எத்தனை ஏக்கர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் இடுபொருள் மானியம், காப்பீடு,இழப்பீடு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டார். இதனை தொடர்ந்து ஒரு ஏக்கருக்கு 84,000 வரை இழப்பீடு தரப்பட்டது ஆனால் தற்போது திமுக ஆட்சியில் ஒரு ஹெக்டருக்கு 13,500 தான் வழங்கப்பட்டது இது யானை பசிக்கு சோளப்பொறியாகும்.

 இன்றைக்கு திமுக அரசு காவிரி நீரை பெற்று தரவில்லை, முல்லைப் பெரியார் அணையை உயர்த்த முடியவில்லை, தற்போது வைகை அணையில் கூட தண்ணீர் திறக்க முடியவில்லை. 

இப்படி நீர் மேலாண்மையில் எதையும் கடைப்பிடிக்கவில்லை குடிமாரமத்து திட்டத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார் ஆனால் இன்றைக்கு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக அது கிடைப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் நீர் சேகரிப்பில் மிகப்பெரிய சவாலாக உள்ளது அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செய்ய வேண்டும் என கூறினார்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா, மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், பொதுக்குழு உறுப்பினர் சுதாகரன், ஒன்றிய கழகச் செயலாளர் செல்லப்பட்டி ராஜா, உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு,மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திர பாண்டி,  எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், 58 கால்வாய் விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயராஜ், சிவப்பிரகாசம், பிச்சை மாயன் ஆகியோர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *