• Sat. Apr 20th, 2024

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

Byமதி

Oct 30, 2021

தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
அதனடிப்படையில், 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவு கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி பேரறிஞர் அண்ணா அவர்களால் 1968 -ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் இருந்தது.

எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் நவம்பர் 1 ஆம் நாளை எல்லைப்போராட்டத் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைச்சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி சிறப்பித்து வருகிறது. இதில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லைக்காவலர்கள் 110 பேருக்கு நவம்பர் 1ஆம் நாள் தலா ரூபாய் 1 இலட்சம் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *