புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையம் பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் சம்யுக்தா (29). திருநங்கையான இவர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் அவரது வீட்டை பூட்டி விட்டு வீட்டின் சாவியை வீட்டிற்கு முன்புறம் உள்ள ரேக்கில் உள்ள ஒரு சூ வில் வைத்துவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.
பின்னர் இன்று மதியம் வீட்டிற்கு திரும்பிய காவலர் சம்யுக்தா வீட்டின் சாவியை அவர் வைத்த சூ வில் பார்க்கும் பொழுது இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 சவரன் தங்க நகை காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் சம்யுக்தா இது குறித்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருக்கோகர்ணம் காவல்துறையினர் கைரேகை நிபுணர் உதவியுடன் காவலர் சம்யுக்தா வீட்டில் கொள்ளையடித்த கொள்ளைகளை தேடி வருகின்றனர்.
சமீப காலமாக புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் தற்போது காவலர் குடியிருப்பில் உள்ள காவலர் வீட்டிலேயே நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.