புதுக்கோட்டை அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோவில் திடலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.
இதனையடுத்து அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்பி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர்,திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 800 காளைகளும் 250 காளையர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியானது ஜல்லிக்கட்டு விதிமுறைகளை கடைபிடித்து நடைபெற்று வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டி ஐந்து சுற்றுகளாக நடைபெற உள்ளது. வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்க்கப்படும் காளைகள் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து வருவதை காளையர்கள் மல்லு கட்டி தழுவி வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் 300ற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுகாதாரத் துறையினர்,வருவாய்த்துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.





