அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பறிக்கப்பட்ட உரிமை களை மீண்டும் வழங்கக் கோரி ஆக.5 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு மாநில ஒருங்கிணைப்பாளர்களில் மு.அன்பரசு கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஆசிரி யர்களிடமிருந்து ஏராளமான உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளன. திமுக அரசு அமைந்த பிறகு அவை அனைத்தும் வழங்கப்படும் என்று தற்போதைய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தேர்தல்காலத்தில் கூறினார். ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளானபிறகும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலாக்கவில்லை. சரண்டர் விடுப்பை திரும்பவும் தரவில்லை. ஒன்றிய அரசு அறிவித்தபடி 1.1.2022 முதல் வழங்க வேண்டிய 3 விழுக்காடு அகவிலைப் படியையும் வழங்காமல் உள்ளது. எனவே, 3 விழுக்காடு அகவிலைப்படியை வழங்க வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்டர் விடுப்பினை மீண்டும் செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி ஆக.5 அன்று மாவட்டத் தலைநகரங்களில் முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். உரிமை மீட்பு மாநாடு இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் சென்னையில் உரிமை மீட்பு மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டிற்கு முதலமைச்சரை பங்கேற்க அழைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.