சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த கௌதம் (34) என்பவரது மனைவியான கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த பிரியா (26)விற்கு 40 நாட்களுக்கு முன்பாக அறுவைசிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது.
இதையடுத்து குழந்தையை கணவர் அவரது வீட்டிற்கு எடுத்துசென்றுள்ளார்.

இதனையடுத்து இன்று காலை மதுரை மாவட்டம் கூடக்கோவில் அருகேயுள்ள குலதெய்வ கோவிலான வேம்புடையான் கோவிலில் வைத்து குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தாயார் பிரியாவிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் பிரியாவிற்கு கணவரின் சகோதரர் கௌசிக் சாமியாடியபடி விபூதி பூசிவிட்டு பிரியாவின் தலையில் ஆசிர்வதிப்பதாக அடித்தபோது சம்பவ இடத்திலயே மயங்கிவிழுந்துள்ளார்.
இதனையடுத்து பிரியாவை வலையங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் அவரது உடலானது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை கோட்டாச்சியர் ஷாலினி தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் காவல்துறையினர் எதிர்பாராத விபத்து மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.