• Sat. Apr 20th, 2024

இதுதான் திராவிட மாடலா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

ByA.Tamilselvan

Jan 2, 2023

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, வந்ததற்கு பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க. இருக்கிறது. இதுதான் திராவிட மாடலா?தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேட்டி
புத்தாண்டு தினத்தையொட்டி தொண்டர்களை சந்திக்க, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு பளீரென வெள்ளை நிற உடையில் விஜயகாந்த் நேற்று காலை வந்தார்.அதற்கு முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் பேசும் போது…விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். பேசுவதிலும், நடப்பதிலும் சிரமம் இருக்கிறது. இருந்தாலும் தொண்டர்களை சந்திக்க விரும்பி, அனைவருக்குமே அழைப்பு விடுத்தார். இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் விஜயகாந்த் நிச்சயம் கலந்துகொள்வார். தொண்டர்களை சந்தித்ததில் ஒரு மிகப்பெரிய எழுச்சி விஜயகாந்துக்கும், தலைவனை சந்தித்ததில் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியும் உருவாகி இருக்கிறது. தே.மு.தி.க. ஒரு அசைக்கமுடியாத சக்தி என்பதை மீண்டும் தொண்டர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். டெல்லியில் தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தே.மு.தி.க. நிச்சயம் பங்கேற்கும். கட்சியின் உள்கட்சி தேர்தல் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்ட அறிவிப்பை விஜயகாந்த் அறிவிப்பார். தே.மு.தி.க.வின் தலைவர் எப்போதுமே விஜயகாந்த்தான்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுவிலக்கு, ‘நீட்’ ஒழிப்பு, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி என பல வாக்குறுதிகளை தி.மு.க. அள்ளி வீசியது. ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, வந்ததற்கு பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க. இருக்கிறது. இதுதான் திராவிட மாடலா? என மக்கள் கேட்கிறார்கள். மக்கள் இதனை ஏற்கவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. எனவே உரிய நேரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை விஜயகாந்த் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *