ஒவ்வொரு ஆண்டும் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களில் அவர்களின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து சுத்தப்படுத்தி, அந்த சிலைகளுக்கு அருகே இருக்கக்கூடிய புதர்களை வெட்டி தூய்மைப்படுத்தும் பணியை 6 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து செய்து வருகிறார் பாசறை சரவணன்.
யார் இந்த பாசறை சரவணன்? அவரிடமே நமது அரசியல் டுடே சார்பாக கேட்டோம்.
“அதிமுகவின் உயிர் தொண்டன் நான். 2010 ஆம் ஆண்டு அம்மா இளைஞர் பாசறை என்ற அமைப்பை கட்சியில் உருவாக்கிய போது விருதுநகர் நகர பாசறை செயலாளராக என்னை நியமித்தார்கள். அதனால் என் பெயர் பாசறை சரவணன் என்று ஆனது. எட்டு வருடமாக அந்தப் பதவியில் இருந்தேன்.
அதன்பின் விருதுநகர் நகர ஐடி விங் செயலாளராக எங்கள் மாவட்ட செயலாளர் கே டி ஆர் அவர்களால் நியமிக்கப்பட்டு இப்போது பணியாற்றி வருகிறேன்.
அதிமுகவில் அண்ணா பிறந்தநாள், அண்ணா நினைவு நாள், எம்ஜிஆர் பிறந்த நாள், எம்ஜிஆர் நினைவு நாள், கட்சி தொடக்க நாள், இப்போது அம்மா பிறந்தநாள், அம்மா நினைவு நாள் ஆகியவை எங்களுக்கு மிக முக்கியமான நாட்கள்.
விருதுநகரில் நகராட்சி அருகில் இருக்கக்கூடிய அண்ணா சிலை, கருமாரி மடம் அருகே இருக்கக்கூடிய எம்ஜிஆர் சிலை ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியை நான் கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன்.
நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களில் பல்வேறு நிர்வாகிகளும் தொண்டர்களும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வருவார்கள். அப்போது அந்த இடம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதனால் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, நினைவு நாளான பிப்ரவரி 3இல் அண்ணா சிலைக்கும், எம்ஜிஆர் பிறந்த நாள் ஜனவரி 17, நினைவு நாளான டிசம்பர் 24, அதிமுக தொடங்கப்பட்ட நாளான அக்டோபர் 17 ஆகிய நாட்களில் எம்.ஜி.ஆர். சிலைக்கும் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்து சிலைகளை சுத்தப்படுத்தி… அங்கே இலைகள், தழைகள், சருகுகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி அந்த வளாகத்தையே சுத்தமாக வைத்திருப்பேன்.
இந்தப் பணியை என்னுடைய தனிப்பட்ட கடமையாக கடந்த ஆறு ஆண்டுகளாக செய்து வருகிறேன். இதில் எனக்கு ஒரு நிம்மதி கிடைக்கிறது. எங்களது முன்னோடி தலைவர்களோடு மானசீகமாக நாம் தொடர்பில் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. அதனால் இந்த செயலை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். இதை என்றும் நான் தொடர்வேன்” இன்று நிகழ்ச்சியாக குறிப்பிட்டார் பாசறை சரவணன்.
பாசறை சரவணன் போன்ற பக்கா தொண்டர்கள்தான் அதிமுக போன்ற கட்சிகளுக்கு உண்மையான பலம்.
