அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆன ஆர்பி உதயகுமார் மீது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருக்கிறார் என்கிறார்கள் மதுரை அதிமுகவினர்.
இந்தக் கோபத்துக்கு என்ன காரணம் என அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“அதிமுகவில் இருந்து முக்குலத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு தென் மாவட்டத்தில் அதிமுகவின் முக்குலத்து சமுதாய முகமாக உதயகுமாரை முன்னிறுத்தினார் எடப்பாடி பழனிசாமி.
எம்ஜிஆர் காலத்து சீனியரான செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா ஆகியோர் அதிமுகவில் இருந்த போதும் அவர்கள் சற்று சீனியர்கள் என்பதாலேயே உதயகுமாருக்கு சில புதிய முக்கியத்துவங்களை அளித்தார் எடப்பாடி.
ஆனால் எடப்பாடி எதிர்பார்த்தது போல தென் மாவட்டத்தில் முக்குலத்து சமுதாயத்தை அதிமுகவுக்கு ஆதரவாக திரட்டும் வேலையை உதயகுமார் கொஞ்சம் கூட செய்யவில்லை.
அதுமட்டுமல்ல தனது திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியைத் தாண்டி அவரது அரசியல் செயல்பாடுகள் ஆக்டிவாக இல்லை என்றும் சமீப மாதங்களாக எடப்பாடி பழனிசாமிக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறது.
இந்த நிலையில் தான், சில தினங்களுக்கு முன்பு உதயகுமார் கொடுத்த பேட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் எடப்பாடி.
அதாவது தமிழக வெற்றி கழகம் கட்சியை வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி இணைப்பதற்காக எடப்பாடி பக்குவமாக பதமாக சில வேலைகளை செய்து வருகிறார்.
குறிப்பாக கரூர் சம்பவத்துக்கு பிறகு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் திமுக ஆதரவு சமூக ஊடக இன்ஃபின்ஸர்களும் விஜய் மீது டோட்டல் அட்டாக் நடத்திக் கொண்டிருந்த நிலையில்… விஜய்க்கு ஆதரவாக அரசியல் ரீதியான ஒரு பெரும் குரலாக ஒலித்தார் எடப்பாடி எடப்பாடி.

கரூர் சம்பவத்தில் ஆளுங்கட்சி மீது தான் குறைபாடு இருக்கிறது, அந்த கூட்டத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை என்று ஸ்டாலின் அரசையும் அதன் அதிகாரிகளையும் கடுமையாக விளாசினார் எடப்பாடி.
இப்படி தமிழக வெற்றி கழகத்தை அதிமுகவோடு கூட்டணிக்கு இணைப்பதற்கு எடப்பாடி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதை குறைக்கும் வகையிலும் திமுக அரசை திமுக அரசின் வலிமையை பாராட்டும் விதத்திலும் உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
அக்டோபர் 21 ஆம் தேதி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமாரிடம் அதிமுக-தவெக கூட்டணி அமையுமா என்று கேட்கப்பட்டது.
அப்போது அவர், “திமுக என்ற பலமான மிருக பலம் கொண்ட ராட்சச பலம் கொண்ட வலிமை வாய்ந்த திமுகவை நாம் வீழ்த்த வேண்டும் என்று சொன்னால், வீழ்த்த நினைக்கிற அதையே லட்சியமாகக் கொண்டு கட்சி ஆரம்பித்திருக்கிற விஜய் ஆழ்ந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது.
ராட்ச பலம் கொண்ட திமுகவிடம் இருந்து தனது கட்சியையும் தொண்டர்களையும் காப்பாற்றுகிற நல்ல முடிவை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தொண்டர்களின் விருப்பத்தையும் மக்களின் விருப்பத்தையும் விஜய் உணர்ந்து நல்ல முடிவெடுப்பார்.

எதிரியின் மதிப்பீட்டை துல்லியமாக கணக்கீடு செய்ய வேண்டும். எதிரியின் பலம் ராட்சச பலம் என்று இருக்கும் நிலையில் விஜய் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ்நாட்டையும், தவெகவையும் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று பேட்டியளித்திருந்தார் உதயகுமார்.
இந்த பேட்டியில் திமுக ராட்சச பலத்தோடு இருக்கிறது என்று மூன்று முறை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் உதயகுமார். திமுகவின் வலிமையை உயர்த்திச் சொல்லும் விதமாக உதயகுமார் பேசிய பேச்சை கட் செய்து, அந்த பயம் இருக்கட்டும் என்று திமுகவினர் சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும், “2021 சட்டமன்றத் தேர்தலில் ஓரிரு சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதுவும் கூட்டணி பலத்தால்தான். இப்போது திமுக கூட்டணி கலகலத்துப் போயிருக்கிறது.
இந்நிலையில் எடப்பாடியார் தமிழ்நாடு முழுதும் செல்லுமிடங்களிலெல்லாம் திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை என்று பேசி வருகிற நிலையில… அதிமுகவிலேயே உதயகுமார் மட்டும் திமுக ராட்சச பலத்தோடு இருப்பதாக ஏன் சொல்கிறார்? ஒருவேளை தேர்தலுக்கு முன் திமுக நெருக்கடி கொடுத்தால் அவர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவிலேயே சேரும் திட்டமும் இருக்கலாம்” என்று மதுரை அதிமுகவினரே பேசிக் கொள்கின்றனர்.
இந்தத் தகவல் அனைத்தும் எடப்பாடிக்கு போக, அவர் உதயகுமார் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். எந்நேரமும் உதயகுமார் மீது கட்சி ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.













; ?>)
; ?>)
; ?>)