• Tue. Apr 23rd, 2024

முதல்வர் நடிக்கிறாரோ? – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Byகுமார்

Nov 14, 2021

முதல்வர் ஜேம்ஸ்பாண்ட் போல ஒருமுறை வருகிறார், பேண்ட் சட்டையோடு ஒருமுறை வருகிறார், முதல்வர் நடிக்கிறாரோ என மக்கள் நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாடக்குளம் கண்மாய் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ, தனது ஆதரவாளர்களுடன் கண்மாயை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கண்மாய் நீர் இருப்பு மற்றும் கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், மதுரை மாடக்குளம் கண்மாய் 80 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளது. வைகையாற்றில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டியதால் தெப்பக்குளம் நிரம்பியுள்ளது.

தற்போது ஒரு வருடத்திற்கு முழுமையாக தெப்பக்குளம் நிரப்பி உள்ளது. அதுமட்டுமில்லாமல் மதுரையை சுற்றியுள்ள ஏரி, குளம் நீர்நிலைகள் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது.
இதற்கு அதிமுக தான் காரணம். எங்கள் ஆட்சியில் முறையாக மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

ஆனால் திமுகவினர் எதையுமே செய்யவில்லை. நாங்கள் குடிமராமத்து பணி செய்யும் போது எங்களோடு ஏட்டிக்கு போட்டியாக தூர்வாரும் பணியை செய்தனர்.

ஸ்மார்ட் சிட்டி பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வேலை சரியாக நடக்கிறதா, பணிகள் நடைபெறுவது தொழில் நுட்ப வல்லுநர்கள் சான்றிதழ் கொடுத்தால் தான் வேலையே நடக்கும். எனவே, ஸ்மார்ட் சிட்டி பணியில் ஊழல் என்றால் தற்போது ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருக்கும் போது ஊழலை கண்டுடிக்க வேண்டியது தானே….

இவ்வாறு குற்றச்சாட்டை கூறி திமுக பொறுப்பை தட்டி கழிப்பதா…?

திமுக அரசு இரண்டு மாதத்திற்கு முன்பாகவே விழித்திருக்க வேண்டும்.

திமுக அரசு முழுக்க முழுக்க விளம்பரம் தேடுவதிலேயே உள்ளது. முதலமைச்சர் ஜேம்ஸ்பான்ட் போல ஒருமுறை வருகிறார். ஒரு முறை பேண்ட் சட்டையில் வருகிறார்.

முதல்வர் நடிக்கிறாரோ என மக்கள் நினைக்கின்றனர். முதல்வர் படப்பிடிப்பில் உள்ளாரா என நினைக்கிறார். முதல்வராக ஸ்டாலினை மக்கள் பார்க்கவில்லை.

அதிமுக ஆட்சியில் மழைக்காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம்.
மழைக்காலத்திற்கு முன்பே அதிகாரிகளை கண்காணிக்க நியமித்தோம். ஆனால் திமுக ஆட்சியில் அதிகாரிகள் தூக்கியடிக்கப்பட்டனர்.

திமுக ஆட்சியில் புது அதிகாரிகளுக்கு வெள்ள நீர் எப்படி வரும், வடிகால் எப்படி வடியும் என தெரியவில்லை. மதுரை ஸ்மார்ட் சிட்டி நகராகவாக உள்ளது. எங்கு பார்த்தாலும் சாக்கடை மழைநீர் ஓடுகிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து பணிகள் காரணமாகத்தான் நீர்நிலைகள் முழுமையாக நிறைந்தன. இதன்காரணமாக மழை வெள்ளத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்வில்லை.

தேவையில்லாமல் எங்கள் அரசை குறை சொல்லாமல், முதல்வரில் இருந்து அமைச்சர்கள் வரை எங்களை குறை சொல்லாமல் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.

எங்கள் ஆட்சியில் எப்படியோ இனியாவது திமுக ஆட்சியில் விழித்துக்கொண்டு சிறப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்க நகைக்கடனில் மோசடி எனக்கூறுவது தவறானது. தமிழகத்தில் 4449 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. தொடர் ஆய்வுகள் சோதனைகள் செய்யப்பட்டன.

தனித்தனி அதிகாரிகள், அலுவலர்கள் நியமியப்பட்டு பணிகள் நடைபெற்றன.

அதிமுக ஆட்சியில் நகை மதிப்பீடு சரியாக இருந்தது. எங்கள் ஆட்சியில் நகைகடனில் மோசடி நடைபெற இல்லை. அவர்கள் ஆட்சியில் தான் தங்க நகை மோசடி நடந்துள்ளது. தங்க நகைக்கடன் மோசடியில் திமுக முன்னாள் எம்.பி. ஒருவர் சிக்கியுள்ளார்.

கூட்டுறவுத்துறையில் தவறு நடந்தால் யாரும் தப்பிக்க முடியாது. கூட்டுறவு சங்கங்களில் தவறு நடந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றியது அதிமுக.

நீர்நிலைகள் யாருடைய காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டது. 2015ல் ஜெயலலிதா இதுபற்றி விவரமாக எழுதியுள்ளார்.
வள்ளுவர் கோட்டத்தையே குளத்தில் தான் அன்றைய முதல்வர் கருணாநிதி கட்டினார். இது போன்று பல இடங்களில் அரசுத்துறை மற்றும் கட்சிக்காரர்களளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பட்டா போட்டுவிட்டனர்.

தண்ணீர் எங்கு எங்கு தங்குமோ அதையெல்லாம் தாரை வார்த்தனர்.
தண்ணீர் செல்லும் இடங்களை, குறிப்பாக தற்போது படகு செல்லும் இடங்களை பட்டா போட்டு கொடுத்தது கலைஞர் ஆட்சியில் தான். மழை வெள்ள பாதிப்பு குறித்து திமுக திமுகவை அரசியலுக்காக இரண்டு கட்சிகளையும் சிலர் குற்றச்சாட்டு கூறுகின்றனர்.

மதுரை மாநகராட்சி, சட்டக்கல்லூரி, மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவை திமுக ஆட்சியில் நீர்நிலையில் தான் கட்டினர்.

முல்லைப் பெரியாறை நீங்கள் திறந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் கேரள அரசு திறந்துவிட்டனர். ஏன் திறக்கப்பட்டது என கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு வழி சொல்கிறார்கள்.

2011ல் நல்வேளையாக ஜெயலலிதா ஆட்சி அமைந்திருக்காவிட்டால் முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு இடித்திருக்கும். திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் வேட்டு வைத்திருப்பார்கள்.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பெற்ற 142 அடி தீர்ப்பை முறையாக நிறைவேற்ற திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 142 அடி உயர்த்தினோம். இரண்டு முறை 142 அடி நீரை தேக்கினோம்.

கேரளாவில் பெரும் வெள்ளம் வந்தபோதும் அதிமுக அணையை திறக்கவில்லை. ஆனால் தற்போது எந்த தைரியத்தில் திறந்தனர். திமுக கூட்டணி கட்சி என்பதாலேயே, திமுக ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்பதாலேயே கேரளா அணையை திறந்தனர்.

தன்பொய்யை மறைக்க பல பொய்களை கூறுகின்றனர். இவ்வாறு பேசுவது மல்லாக்க படுத்துக்கொண்டு தன் மீது எச்சில் துப்புவதற்கு சமம்.

ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் திமுக துரோகம் இழைத்துவிட்டனர். இதே நிலை தொடர்ந்தால் மக்களும், விவசாயிகளும் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்துவர் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *