• Fri. Apr 26th, 2024

ஐ.பி.எல். மெகா ஏலம், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை ஓப்பிட்டால், இந்தியாவிலும் இது உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 12 லட்சத்தை தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒரே நல்ல விசயம் , கடந்த அலையை போல் உயிர் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், கொரோனா எண்ணிக்கை அதிகரித்தால், நாடு தழுவிய அளவில் லாக் டவுன் போடுவதை தவிர அரசுக்கு வேறு வழி இருக்காது. இதனால் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பெங்களூருவில் நடைபெற இருந்த ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. லாக் டவுனில் நட்சத்திர ஹோட்டல்கள், நிகழ்ச்சி, கூட்டத்திற்கு தடை விதிக்கப்படும். இதனால், ஐ.பி.எல். மெகா ஏலத்தை ஒத்திவைப்பதை தவிர பி.சி.சி.ஐ.க்கு வேறு வழி இல்லை. ஆனால் அதே சமயம் ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம் ஆன்லைனில் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதே போன்று பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

ஆனால் கொரோனா உச்சத்தில் இருந்து வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதே போன்று மார்ச் மாதம் நடைபெற உள்ள இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதற்கு பி.சி.சி.ஐ. தற்போதே நடவடிக்கை எடுத்து வருகிறது. இதே போன்று 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை தொடருக்கும் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஓமைக்கரான் வைரஸ் வந்த வேகத்திலேயே நம்மை விட்டு கடந்துவிடும். இதனால் மூன்றாவது அலை அதிகபட்சம் 2 மாதம் தான் இருக்கும். அதனால் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கு சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *