• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவை நிறுவிய, இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை, பத்ம பூசண் விக்ரம் அம்பாலால் சாராபாய் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12, 1919).

ByKalamegam Viswanathan

Aug 12, 2023

விக்ரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai) ஆகஸ்ட் 12, 1919ல் ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் அம்பாலால் சாராபாய், சரளா தேவி, நூற்பாலைத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும், இயற்பியலிலும் தான் இருந்தது. பெற்றோர் நடத்திய மாண்டிசோரி பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். சுதந்திரப் போராட்டத்தில் சாராபாய் குடும்பம் ஈடுபட்டிருந்ததால் காந்தி, நேரு, தாகூர், மெளலானா ஆசாத், சரோஜினி நாயுடு, சி.வி. ராமன் போன்ற பெருந்தலைவர்கள் இவரது வீட்டில் தங்கிச் சென்றிருக்கிறார்கள். அதனால் இவர்களுடைய தாக்கம் இவரிடம் இருந்தது. உயர் படிப்புக்காக லண்டன் சென்றவர், இரண்டாம் உலகப் போரின் காரணமாக இந்தியா திரும்பினார். குடும்பத் தொழிலைக் கவனிப்பார் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் சர் சி.வி. ராமனிடம் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார்.

இயற்கை விஞ்ஞானத்தின் மீது இருந்த ஆர்வம் வானியலில் திரும்பியது. காஸ்மிக் கதிர்களை ஆராய்வதற்காக நாடு முழுவதும் கண்காணிப்பு மையங்களை அமைத்தார். பெங்களூரு, புனே, இமயமலைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஆய்வு மையங்களில் தாமே உருவாக்கிய கருவிகளைப் பொருத்தினார். 1947ம் ஆண்டு லண்டனில் முனைவர் பட்டத்தை முடித்து நாடு திரும்பியபோது, இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தது. அறிவியல் துறையில் இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, அகமதாபாத்தில் ‘இயற்பியல் ஆய்வு’ மையத்தை உருவாக்கினார். நூற்பாலைகளுக்கான தர நிர்ணயம் செய்யும் ஆய்வகத்தை முதல் முறையாக இந்தியாவில் நிறுவினார். 1955ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள குல்மார்க், திருவனந்தபுரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் இயற்பியல் ஆய்வகங்களை நிறுவினார்.

இசை, நடனம், ஒளிப்படம் போன்ற கலைகளின் மீதும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். புகழ்பெற்ற நடனக் கலைஞர் மிருணாளினியைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் சேர்ந்து கலைகளுக்கான ‘தர்பனா அகாடமி’ யை ஆரம்பித்தனர். 1957ம் ஆண்டு சோவியத் யூனியன் ஸ்புட்னிக்1 செயற்கைக்கோளை முதல் முறையாக பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. செயற்கைக்கோள்கள் மூலம் தகவல் தொடர்பு, வானிலை முன்னறிவிப்பு, இயற்கை வளங்களை ஆராய்வது போன்றவற்றில் மிகப் பெரிய சமூக, பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தார். இவரது அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி மையம் விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்ந்தது.

1963 இல் முதன் முதல் ரஷ்யாவும், அமெரிக்காவும் மனிதர் இயக்கும் விண்சிமிழ்களில் (Spacecrafts) அமர்ந்து அண்டவெளியில் சுற்றி வந்த போது, இந்தியாவின் விண்வெளிப் புரட்சி சிறிய அளவிலே ஆரம்பம் ஆனது. அந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை, நைக்-அபாச்சி (Two Stage Sounding Rocket, Nike-Apache), திருவனந்தபுரம் தும்பா ஏவு தளத்திலிருந்து, இடிக்கனலுடன் உறுமிக் கொண்டு, வானைக் கிழித்துக் கொண்டு, புவியீர்ப்பை எதிர்த்துக் கொண்டு உயரத்தில் எழுந்தது. அது 50 பவுண்டு எடையுள்ள சோடியம் ஆவி வீசு கலனைச் (Sodium Vapour Release Payload) சுமந்து கொண்டு, 125 மைல் உயரத்தை எட்டி இந்தியா விண்வெளிப் படையெடுப்பில் தனது முன்னடியை வைத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் (Earth’s Magnetic Equator) அமைந்துள்ளது.

“முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள். இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை. ஆனால் மனித, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம். தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஓர் பணியை மேற்கொள்கிறோம் என்னும் உறுதியில் இருக்கிறோம்” என்று இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் குறிக்கோளை ஆணித்தரமாக அறிவித்தவர், விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்.

ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு விக்ரம் சாராபாய் தலைமை வகித்தார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணில் செலுத்தப்படுவதற்கு முழுமையான காரணமாக இருந்தார். இந்தியாவின் செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் வளர்ச்சியில் முன்னோடியாகத் இருந்தார். இதன் மூலம் 24 ஆயிரம் கிராமங்களில் 50 லட்சம் பேருக்குக் கல்வியை எடுத்துச் செல்ல உதவினார். இந்திய அணுக்கரு இயலின் தந்தை ஹோமி ஜஹாங்கிர் பாபா மறைந்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைவராக இருந்து, அதை மேலும் விரிவுபடுத்தினார். அறிவியல் கல்வி குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார். அதனால் நாடு முழுவதும் சமூக அறிவியல் மையங்களைத் தோற்றுவித்தார்.

இந்திய மருத்துவத் துறையில் மிக உயர்ந்த தரத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்திய மருத்துவத் துறை மருந்துகளையும் மருத்துவக் கருவிகளையும் சுயமாகத் தயாரிக்க வழிவகுத்தார். இளைஞர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார். அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினார். எப்படிக் கனவு காண வேண்டும், அதை எப்படி நிஜமாக்க வேண்டும் என்பதைப் பலருக்கும் கற்றுக் கொடுத்தார். இந்தியர்கள் உயர்கல்வி பெறுவதற்காக அகமதாபாத்தில் இந்திய மேலாண்மைக் கழகத்தை (IIM) உருவாக்கினார். கடினமான உழைப்பாளி. மிக உயரிய பதவிகளில் இருந்தாலும் எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார். எல்லோரையும் புன்னகையுடன் வரவேற்பார். அவர்களின் பயத்தையும் தயக்கத்தையும் போக்கி, தனக்குச் சமமாக உரையாடுவார். தனிப்பட்ட மனிதர்களின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இவரது மேற்பார்வையில் 19 பேர் ஆராய்ச்சி செய்து, முனைவர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

விக்ரம் சாராபாய் தனியாகவும், சக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்தும் 86 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். பத்ம பூசண், பத்ம விபூசண், போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் அம்பாலால் சாராபாய் டிசம்பர் 30, 1971ல் தனது 52வது வயதில் அகமதாபாத்தில் தூக்கத்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். 52 ஆண்டுகளே வாழ்ந்தாலும் பல்வேறு துறைகளில் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்று, இன்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கிறார், விக்ரம் சாராபாய். 1974ம் ஆண்டு சிட்னியில் உள்ள சர்வதேச வானியல் ஒன்றியம், நிலவிலுள்ள அமைதிக்கடல் (Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு ஒரு பள்ளத்துக்கு விக்ரம் சாராபாயின் பெயரைச் சூட்டியது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.