• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வாகமண்ணில் சர்வதேச பாராகிளைடிங் திருவிழா.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வாகமண்ணில் சர்வதேச அளவில் பாராகிளைடிங் திருவிழா இன்று துவங்கி மார்ச் 23 வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக மலைசார்ந்த இயற்கை எழில் கொண்ட பகுதிகளை எல்லாம் கேரள அரசு சுற்றுலாத்தலமாக்குவதில் தீவிரம் காட்டி வருகிறது. இடுக்கி மாவட்டம் ஏலப்பாறை அருகே கடல்மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது வாகமண். வாகமண் பகுதியில் கேரள வனத்துறையும், சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதால் இந்த இடத்தை, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.

இங்குவரும் சுற்றுலாப்பயணிகள் தற்கொலை விளிம்பு, மொட்டைக் குன்று, பைன்மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், குரிசுமலை, முருகன்மலை ஆகியவைகளை கண்டு ரசித்துச் செல்கின்றனர். வாகமண் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இங்கு இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் பாராகிளைடிங் போட்டி நடைபெறும்.

இந்த ஆண்டு சர்வதேச அளவில் பாராகிளைடிங் திருவிழா இன்று தொடங்கி மார்ச் 23 வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. மாநில சுற்றுலாதுறையின் கீழ் செயல்படும் கேரள சாகச சுற்றுலா மேம்பாட்டு சங்கம், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு, இந்தியா ஏரோ கிளப், ஆரஞ்ச் லைப் பாராகிளைடிங் பள்ளி தொழில் நுட்ப உதவியுடன் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய வான்வெளி சாகச விளையாட்டாக கருதப்படும். இத்திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா, நியூசிலாந்து,

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், பெல்ஜியம், ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகள், தமிழகம், டில்லி, கோவா, மஹாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, சிக்கிம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சர்வதேச, தேசிய அளவில் பிரபலமான நூற்றுக்கும் மேற்பட்ட கிளைடர்கள் பங்கேற்கின்றனர்.
பாராகிளைடிங் சாகச போட்டிகளும் நடக்கின்றன. முதல்பரிசு ரூ.1.5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விழா வாகமண்ணின் பாராகிளைடிங் திறன், கேரளாவின் சாகச சுற்றுலா ஆகியவற்றை சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனுடன் வாகமண் சுற்றுலா திருவிழாவையும் நடத்த முடிவுசெய்தள்ளனர்.