மதுரை அலங்காநல்லூரில் சர்வதேசபலூன் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜனவரி 18 மற்றும் 19ஆம் தேதி பலூன் திருவிழா நடைபெறும் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில், அதற்காக ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் டிக்கெட் விலை 150 என்று விளம்பரம் செய்த நிலையில் பலூன் திருவிழாவை காண்பதற்கு மாலை 3 மணி முதல் ஆயிரக்கணக்கானோர் ஏறுதழுவுதல் அரங்கில் குவிந்தனர்.
ஆனால் காலை முதல் காற்றில் ஈரப்பதம் இருந்ததால் காற்றின் வேகம் அதிகரித்துபலூன் திருவிழா நடைபெறுவது சந்தேகம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பலூன் திருவிழாவை தொடங்கி வைக்க அமைச்சர் மூர்த்தி ஐந்து மணிக்கு வருகை தந்தார்.
ஆனால்காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் டிக்கெட் கவுண்டரில் இருந்த ஒலிபெருக்கி மூலம் அதிகாரிகள் பலூன் திருவிழா ரத்து செய்யப்படும் என்றும் மற்ற நிகழ்ச்சிகள் பார்வையாளருக்காக நடத்தப்படும் என்றும் ஆன்லைனில் 150 கொடுத்து டோக்கன் வாங்கியவர்களும் நேரில் டிக்கெட் வாங்கியவர்களும் மைதானத்திற்குள் செல்ல வேண்டும் என அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.
அரங்கத்திற்குள் வந்த அமைச்சர் பலூன் திருவிழா தொடங்குவது சாத்தியப்படாது என அறிந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் ஆறு மணிக்கு பலூன் திருவிழா தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் காற்றின் வேகம் மேலும் அதிகரித்த வண்ணம் இருந்தது இந்த நிலையில் ஒரு வழியாக 6 மணிக்கு மைதானத்திற்கு வந்த அமைச்சர் பலூனை பறக்க விட எவ்வளவோ முயற்சிகள் செய்தும் பலூனை பறக்க செய்ய முடியவில்லை சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி பார்த்தும் எந்த பயனும் இல்லாததால் வேறு வழி
இன்றி பலூன் திருவிழா ரத்தக் செய்யப்படுவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் மைதானத்திற்குள் சினிமா பாடல் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பொதுமக்களின் திருப்திக்காக நடத்தி எட்டு மணி வரை அமைச்சர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
8 மணி அளவில் பலூன் திருவிழாவை தொடங்கி வைக்காமலேயே அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
பலூன் திருவிழாவிற்கு பொதுமக்கள் வருவதற்கு பேருந்து வசதிகள் எதுவும் செய்யாத நிலையில் வசதி படைத்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் குடும்பத்துடன் வந்து அரங்கம் மற்றும் மைதானத்தை நிரப்பி இருந்தது சாதாரண பொது மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது 100 கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கம் எந்த ஒரு பயனும் இல்லாமல் சாதாரண பொது மக்களுக்கும் பயன்படாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் பேசிச் சென்றனர்.