மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் 4 பெண் கவுன்சிலர்கள் மோதினார்கள். இந்த போட்டியில் பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகளளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது தவிடு பொடியாகி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் மாநகராட்சிகளுக்கான மேயர் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன் படி பெரிதும் எதிர்பார்க்ப்பட்டது மதுரை மேயர் பொறுப்பு யாருக்கு என்பது தான்.இதில் நான்கு முனை போட்டி இருந்தது.ரோகிணி, இந்திராணி பொன்வசந்த், விஜய மவுசமி, வாசுகி சசிகுமார். இந்த நால்வரில் ஒருவர் தான் மேயராக வரக்கூடும். அதிலும் அமைச்சர் பி.டி.ஆர் கை ஓங்கி உள்ளதால் , அவர் கை காட்டும் நபர் தான் மேயராக பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது.
ஆனாலும் அமைச்சர்களை நம்பாமல் திமுக தலைமையை நேரடியாக சென்று சந்தித்து சிபாரிசு செய்து வந்த பொன்.முத்துராமலிங்கத்திற்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. அதே போல சில தினங்களுக்கு முன்பு வாசுகி சசிகுமாருக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மதுரை திமுக வட்டாரத்தில் கிசு கிசு பரவியது.
ஆனால் மதுரை மேயர் பொறுப்பு அமைச்சர் பிடிஆரின் நெருங்கிய நட்பு வட்டரமான வழக்கறிஞர் பொன்வசந்த் மனைவி இந்திராணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை அன்றே அரசியல் டுடே கணித்து செய்தி வெளியிட்டுருந்தது. மதுரை மேயருக்கு மருமகளுடன் முட்டி மோதும் திமுக பிரமுகர் என்ற தலைப்பில் “அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் வழக்கறிஞர் பொன் வசந்தின் மனைவி இந்திராணிக்கும் மதுரை மேயராகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்பதோடு மக்கள் பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையும் இந்திராணி மீது உண்டு. இதனால் அமைச்சர் பி.டி.ஆர். சிபாரிசில் இந்திராணிக்கு மேயர் பதவி கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என அரசியல் டுடே முன்பே கணித்து செய்தி வெளியிட்டிருந்தது.