இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் அமைப்பிற்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்பதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 15மாதங்கள் கடந்தும் போர் நடைபெற்று வருகிறது. இதில் காசா நகரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மத்தியஸ்தலம் செய்தன. பல்வேறு நாட்டு தலைவர்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டு வந்னர். இந்தியாவும், இரு தரப்பு போரால் காசா நகரத்து மக்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியது.
இப்படியான சூழலில், அமெரிக்கா, கத்தார் நாட்டு மத்தியஸ்தலத்தை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பு இடைக்கால போர்நிறுத்ததற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி அறிவித்தார்.
இந்த போர் நிறுத்தம் ஜனவரி 19 முதல் 6 வாரங்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காசாவில் பரிதவித்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு, இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது; “பிணை கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
இது காசா மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான உதவிக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்கவும், போர்நிறுத்தம் வேண்டுமென்றும், நாங்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.