ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது.
எட்டு அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில், துபாயில் இன்று (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இரு நாட்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த போட்டியில் வெல்லும் அணி இறுதிபோட்டிக்கு தகுதி பெறும். இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் போட்டியை எதிர்பார்த்துள்ளனர். ஏனெனில் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு இந்தியா இன்று பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.