விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆண்டாள் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இப்பகுதியில் கல்குவாரி உரிமம் புதுப்பித்தல், பட்டாசு கடைகளில் உரிமத்தை புதுப்பித்தல்,பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு வருவாய்த் துறைப் பணிகளுக்கு முறைகேடாக பணம் கைமாறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை 5 மணி அளவில் அலுவலகப் பணி நேரம் முடிவடைந்து ஊழியர்கள் வீடு திரும்பத் தயாராக இருந்த நிலலயில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் பூமிநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் மும்தாஜ் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். தாசில்தார் ஆண்டாள் மற்றும் அங்கு பணியில் இருந்த துணை வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள் ,கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் என அனைவரையும் தனித்தனியாக அமர வைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் கணினிப் பதிவுகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்குள்ள கோப்புகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்த்தனர். சோதனை ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்தது. எதிர் கோட்டையை சேர்ந்தவர்கள் சரவணகுமார் பட்டாசு கடை உரிமத்திற்காக கொண்டு வந்திருந்த ரூபாய் 90 ஆயிரம் , பட்டா மாறுதலுக்காக வந்திருந்த மணிகண்டனிடம் ரூபாய் 21,500, பட்டாசு கடை உரிமத்தை புதுப்பிப்பதற்காக பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்த ரூபாய் 14 ஆயிரம் மற்றும் வெம்பக்கோட்டை வருவாய் அலுவலர் நாகராஜிடம் ரூபாய் ஆறு ஆயிரம்,கங்கரகோட்டை கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வியிடம் ரூபாய் 3000 உட்பட ரூபாய் ஒரு லட்சத்து 40,500 ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கையினால் வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையை பார்வையிடுவதற்காக ஏராளமானோர் தாலுகா அலுவலகத்திற்கு முன்பாக குவிந்தனர்.




