சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக பத்திரப்பதிவு செய்யாமல் காலதாமதம் செய்யும், ஆண்டிபட்டி சார்பதிவாளரை கண்டித்து பத்திரப் பதிவாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகைஅணை சாலைப்பிரிவில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தாலுகா தலைமை இடமாகவும் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களின் மையப்பகுதியாகும் இருக்கும் ஆண்டிபட்டியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வந்து தங்களது நிலம் சம்பந்தமான சொத்துகளை விற்பனை செய்வதும், வாங்குவதும் வழக்கமாக இருந்துவருகிறது.
இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு பணியில்சேர்ந்த சார்பதிவாளர் சட்டவிதிகளுக்கு உட்பட்டு பத்திரங்களை பதிவுசெய்வதில்லை என்றும், தேவையில்லாத காரணங்களைக்கூறி காலதாமதம் செய்வதாகவும் , அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக லஞ்சம்கேட்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ஆண்டிபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் வழக்கமாக நடைபெறும் பத்திரப்பதிவில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே தற்போது பத்திரப்பதிவு நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் வெளிப்படையாக இல்லாமல் மறைமுகமாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக நடவடிக்கைகள் இருப்பதால் தங்களால் தொழில் செய்யமுடியவில்லை என்று புகார்கூறும் பத்திரப்பதிவாளர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்று ஆண்டிபட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது. இன்று பத்திரம் பதிவுசெய்யவும் , மற்றும் விற்பனை செய்யவும் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.