கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பிலிகுண்டுலு, தேன்கனிக்கோட்டை, கேரிட்டி, அஞ்செட்டி, நட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 6 ஆயிரத்து 200 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 9 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்தது. இன்று விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 7 ஆயிரத்து 51 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 9 ஆயிரத்து 875 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 7 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 800 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று 73.49 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 73.67 அடியானது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.