• Fri. Apr 26th, 2024

தேனி மாவட்டத்தில் இனி பெண்கள் தான் நகராட்சி தலைவர்: கதிகலங்கிய தி.மு.க., வினர்

தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி தலைவர் பதவியும், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பெண்கள் உற்சாக மடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள நகராட்சி உள்ளாட்சி தேர்தல் 2022-க்கான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கான அரசு ஆணை வெளியிட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஆணை யில் பெரும்பங்கு பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், கட்சி நிர்வாகிகள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சிலர் உள்ளாட்சி தேர்தலில் எப்படியும் ‘சீட்’ வாங்கி ஜெயித்த கையோடு அமைச்சர்களின் கை, கால்களை பிடித்து, சேர்மன் பதவியை பிடித்துவிட வேண்டும் என ‘மனக்கோட்டை’ கட்டியிருந்தனர். இவர்களின் மனக்கோட்டை தற்போது சுக்கு நூறாக நொறுங்கிப் போனது. இதற்கிடையில் ‘சீட்’ கிடைத்தால் போதும் என நம்பிக்கையில் மனு கொடுத்த பலரது பெண்களின் மத்தியில் உற்சாகம் ‘பீறிட்டு’ எழுந்துள்ளது.

அந்தவகையில், தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 6 நகராட்சிகளில் அதிக மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் தேனி அல்லிநகரம் நகராட்சி தேர்வுநிலை அந்தஸ்தை பெற்றுள்ளது.

இம்முறை எப்படியும் தலைவர் பதவியை பிடித்துவிடலாம் என, தேனி நகர தி.மு.க., பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் ‘பம்பரம்’ போல சுழன்று… சுழன்று கட்சிப் பணியாற்றி வந்தார். கடைசியில் இவருக்கும் ‘ஆப்பு’ விழுந்தது. என்ன தான் கட்சியில சிலர் மாடாய் உழைத்தாலும்…..கடைசி வரை அவர்களுக்கு நிர்வாகி என்ற அந்தஸ்து மட்டுமே மிஞ்சுவதாக கட்சி நிர்வாகிகள் பலரும் புலம்பி தீர்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *