• Sat. Apr 20th, 2024

தலைவர்களின் நினைவிடங்களில்
உதயநிதி ஸ்டாலின் மரியாதை

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தனது 45-வது பிறந்தநாளையொட்டி பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று நேற்று மரியாதை செலுத்தினார்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தனது தந்தையும், தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து, கட்டிப்பிடித்து, கன்னத்தில் முத்தமிட்டு முதல்-வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். துர்கா ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த
நிகழ்ச்சியின்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் எம்.பி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி பம்பிங் ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் இலவச மருத்துவ முகாமை உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான இளம்பெண்கள் உதயநிதி ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கிக்கு தேவையான உபகரணங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெரு சமுதாய நலக்கூடத்தில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கைலாசபுரத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். மரக்கன்று நட்டதுடன், ஏழை-எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
அதன் பின்னர் தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் வளாகத்துக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து கேக் வெட்டி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினார். பின்னர் நிர்வாகிகள், தொண்டர்களின் பிறந்தநாள் வாழ்த்துகளை அவர் ஏற்றார்.
அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., தி.மு.க. வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள் பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன், வி.செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், கீதா ஜீவன், மதிவேந்தன், தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *