மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, சிறப்பு கவனம் செலுத்தி இந்த எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், தமிழக முழுவதும் 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டச் சிறைகளில் உள்ள எழுதப் படிக்க தெரியாத சிறைவாசிகள் 1249 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 6 மாத கால சிறப்பு எழுத்தறிவு கல்வி திட்டம் மூலம் என்னும் எழுத்தும் கற்கும் வகையில் சிறைத்துறை மற்றும் பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம் மூலம் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டும் 20 சிறைவாசிகளுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமனம் செய்யப்பட்டு தனி கவனம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக சிறைத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் இந்த சிறப்பு எழுத்தறிவு திட்டம் துவக்கப்பட்டது.
இவ்விழாவில், மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் மற்றும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா,மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியை துவக்கி வைத்தனர்.
இப்பயிற்சியில், மதுரை மத்திய சிறையைச் சேர்ந்த 77 சிறைவாசிகள்,பெண்கள் சிறையை சார்ந்த 30 சிறைவாசிகளும் கல்வி பயில்கின்றனர்.
6 மாத பயிற்சி முடிவில் இவர்களுக்கு கல்வித்துறை மூலமாக சான்றிதழ் வழங்கப்படும்.
கல்வி பயிலும் சிறைவாசிகளுக்கு கற்றல் கையேடுகள் மற்றும் சிலேடு பென்சில் நோட்டு புத்தகங்கள் ஆகியவை இன்று வழங்கப்பட்டது.
இவ்விழாவில், கலந்து கொண்ட மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, சிறைவாசிகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ள நலத்திட்டங்களை பாராட்டி பேசினார். மேலும், சிறைத்துறை டிஜிபி கொண்டு வந்த கூண்டுக்குள் வானம் திட்டத்திற்கு நூல்களை வழங்கி, சிறை துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி வளர்ச்சிப் பணிகளை பாராட்டினார்.