மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

காலை முதல் மதியம் 12 மணி வரை வெளி நோயாளிகளுக்கான மருத்துவ பிரிவு செயல்பட்டு வரும் நிலையில் இதற்கான போதிய பணியாளர்கள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் ரத்த அழுத்தம் பார்க்கும் இடத்தில் போதிய மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் சோழவந்தான் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்காக சோழவந்தான் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக முள்ளிப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் ஏற்பட்டு தினசரி ஐந்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் 20க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலையில் அவர்களுக்கான நுழைவு சீட்டு பதியும் இடத்தில் போதிய ஆட்கள் இல்லை எனவும் மாத்திரைகள் வழங்கும் இடத்தில பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக மருத்துவமனை முன்பு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் நோயாளிகள் உடன் வரும் உறவினர்கள் மற்றும் பொது மக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஆகையால் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் போதுமான பணியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு உரிய சிகிச்சையை விரைவாக செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.





