

நற்றிணைப் பாடல் 47:
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக நாடற்கு, ‘இது என’ யான் அது
கூறின் எவனோ- தோழி! வேறு உணர்ந்து,
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி,
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து,
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?
பாடியவர் நல்வெள்ளியார்
திணை குறிஞ்சி
பொருள்:
முருகன் அணங்காகி (வருத்தும் தெய்வமாகி) என்னை ஆட்டிவைக்கிறான் என்று கழங்கை உருட்டிச் சொல்லக் கேட்டு, ஆட்டுக்குட்டியை அறுத்து முருகுவிழாக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். நான் பசலை உற்று வருந்துவதற்குக் காரணம் கானகநாடன் என்று சொல்லிவிட்டால் என்ன – என்று தோழி, தலைவனுக்குக் கேட்கும்படி, தலைவியிடம் சொல்கிறாள். புலி ஆண்-யானையைக் கொன்றுவிட்டது. அதனை எண்ணிக்கொண்டு பெண்-யானை நடமாட்டம் இல்லாமல் வருத்தத்தோடு நின்றுகொண்டிருந்தது. பசுமையான நெய்தல் இலை போல் காதுகளைக் கொண்ட தன் குட்டியுடன் நின்றுகொண்டிருந்தது. புண் பட்டு வருந்துபவர் போன்று வருந்திக்கொண்டு நின்றது. இப்படிப்பட்ட கானத்தை உடையவன் என் நாடன். இந்த நாடன் நினைவு என்னை வருத்துகிறது என்பது தெரியாமல் முருகன் அணங்குகிறான் (வருத்துகிறான்) என்று கழற்சிக்காயை உருட்டிக் குறிசொல்லக் கேட்டு, ஆட்டுக்குட்டியை அறுத்துப் பலி கொடுத்து, தாய் முருகுவிழா நடத்தி முருகனைத் தணிக்கும்பொருட்டு விழாக் கொண்டாடிக்கொண்டிருக்கிறாள். கானகநாடன் நினைவு வருதுகிறது என்று உண்மையைக் கூறிவிட்டால் என்ன?
