• Thu. Apr 25th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 20, 2022

நற்றிணைப் பாடல் 46:

வைகல்தோறும் இன்பமும் இளமையும்
எய் கணை நிழலின் கழியும், இவ் உலகத்து;
காணீர் என்றலோ அரிதே; அது நனி
பேணீர் ஆகுவிர்- ஐய! என் தோழி
பூண் அணி ஆகம் புலம்ப, பாணர்
அயிர்ப்புக் கொண்டன்ன கொன்றை அம் தீம் கனி,
பறை அறை கடிப்பின், அறை அறையாத் துயல்வர,
வௌ; வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து,
எவ்வம் மிகூஉம் அருஞ் சுரம் இறந்து,
நன் வாய் அல்லா வாழ்க்கை
மன்னாப் பொருட் பிணிப் பிரிதும் யாம் எனவே.

பாடியவர் பாடியவர் பெயர் கிடைக்கவில்லை
திணை பாலை

பொருள்:

எய்யும்போது பாயும் அம்பின் நிழல் போல துய்க்கும் இன்பமும், இளமைப் பருவமும் கழிந்துவிடும். இதனைத் துய்த்துப்-பாருங்கள் என்று அறிவுறுத்தும் காலம் அரிதாகிவிட்டது.
ஐய! இளமையையும் இன்பத்தையும் பேணாதவர் ஆகிவிட்டீர்கள். என் தோழியின் பூண் அணிந்த மார்பகம் புலம்பும்படி விட்டுவிட்டுப் பொருளீட்டச் செல்கிறேன் என்கிறீர்கள். நீங்கள் செல்லும் வறண்ட சுரத்தில் பாணரின் ஊதுகொம்புகளைக் கொண்டிருப்பது போல கொன்றைமரம் காய்த்துத் தொங்கும். காற்று அடிக்கும்போது அந்தப் பாணர்களின் பறை முழங்குவது போலக் கொன்றை நெற்றுக்கள் ஒலி எழுப்பும். துன்பத்தை மிகுதியாக்கும் சுரம் அது. அதன் வழியே செல்வது நல்ல வாய்ப்பினைத் தராத வாழ்க்கை. பொருள் நிலையில்லாதது. பொருளைப் பிணித்துக் கொண்டுவர அந்த வழியில் செல்வதாகச் சொல்கிறீர்களே. 

இவ்வாறு சொல்லித் தோழி தலைவனைத் தடுக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *