• Sat. Apr 20th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 19, 2022

நற்றிணைப் பாடல் 45:
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே:
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!

பாடியவர் பாடியவர் பெயர் கிடைக்கவில்லை
திணை நெய்தல்

பொருள்:

காதலியை அழகுபடுத்தும் பரிசு ஒன்றைக் காதலன் கொடுக்கிறான். தோழி அதனை வாங்க மறுத்துக் கூறும் சொற்கள் இவை.
இவளோ, பரதவர் மகள். நீலக்கடலின் உள்ளே சென்று மீன் கொண்டுவரும் பரதவன் மகள். கடலை அடுத்த கானல் நிலத்தில் உள்ள சிறுகுடியில் வாழ்கிறோம். நீயோ, கொடி கட்டிப் பறக்கும் கடைத்தெரு கொண்ட பழமையான ஊரில் தேரில் செல்லும் செல்வம் படைத்த பெருமகனின் மகன். நாங்களோ, சுறாமீன் துண்டங்களைக் காயவைத்துக்கொண்டு, அதனைக் கவ்வ வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீ தரும் அணிகலங்களின் அழகு எதற்கு? இங்கே புலால் கவிச்சல் அடிக்கிறது. தூரத்திலேயே நில்லுங்கள் ஐயா. கடல்-விளைச்சலைக்கொண்டு வாழும் எங்களின் சிறுநல்வாழ்க்கை உனக்கு ஒத்துவராது. எங்கள் வாழ்க்கை எங்களுக்குத்தான் செம்மாப்பு உடையது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *