• Thu. Apr 25th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 15, 2022

நற்றிணைப் பாடல் 42:

மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்
அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய
பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க, மாண் வினை
மணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,
‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லே
இல் புக்கு அறியுநராக, மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசு அறக் கழீஇ,
சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய
அந் நிலை புகுதலின், மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே.

பாடியவர் கீரத்தனார்
திணை முல்லை

பொருள்:
பாக! அவள் அன்று மகிழ்ந்து களித்ததை என்னால் மறக்க முடியவில்லை. வந்தவர்களுக்கு விருந்து படைத்து உடல் வருந்துவதே அவள் செய்யும் அறம். அதுதான் அவளுக்கு நிலைபெற மேற்கொண்டிருந்த தொழில். அப்போது ஒருநாள் மழை பொழிந்தது. அது பழமழை ஆகிவிட்ட மறுநாள் புதுநீர் பள்ளத்தில் பாய்ந்துகொண்டிருந்தது. என் தேரில் மணிகள் பல கட்டப்பட்டிருக்கும். நான் தேரில் செல்லும்போது அந்த மணியின் நாக்குகள் பேசும். அந்த வேலைப்பாடு கொண்ட மணியின் ஒலி கேளாமல் அப்போது தன் ஒளி பொருந்திய முகநெற்றியைக் காட்டிக்கொண்டு அவள் காத்திருந்தாள்.
போய்ப் பாருங்கள் என்று சொல்லி என் இளம் மெய்க்காப்பாளர்களை அனுப்பி வைத்திருந்தேன். அவள் எப்படி இருக்கிறாள் என்பதை விரைந்து வந்து சொன்னார்கள். நான் வருவது கேட்டு, என்றும் நீராடாமல் இருந்த தன் கூந்தலில் இருந்த அழுக்குப் போக நீராடிக் கழுவிக்கொண்டிகிறாள். பலவாக அடர்ந்திருக்கும் தன்னுடைய கூந்தலில் சில பூக்களை அவள் அழுத்திச் செருகிக்கொண்டிருந்தாள். அப்போது நான் நுழைந்தேன். தன் உடம்பை வருத்திக்கொள்ளாமல் வந்து என்னை வரவேற்றாள். அது அவளுக்கு மகிழ்ச்சி தரும் விழாக் கொண்டாட்டம். அதுதான் என்னால் மறக்கமுடியவில்லை என்று போரை முடித்துவிட்டு வீடு திரும்பும் தலைவன் தன் பாகனை விரைந்து தேரைச் செலுத்துமாறு தூண்டுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *