

நற்றிணைப் பாடல் 34:

கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!
கடவுள் ஆயினும் ஆக,
மடவை மன்ற, வாழிய முருகே!
பாடியவர் பிரமசாரி
திணை குறிஞ்சி
பொருள்:
என்னை வருத்துவது நீ இல்லை என்பது உனக்குத் தெரியும். தெரிந்திருந்தும் முருகனாகிய நீதான் வருத்துகிறாய் என்று கூறி உன் பூசாரி வேலன் என் வீட்டில் என் தாய் வேண்டுகோளின்படி வெறியாட்டு நடத்துகிறான்.
(என்னைப் பேய் ஓட்டுகிறான்)
உண்மை தெரிந்திருந்தும் என் இல்லத்தில் நடக்கும் வெறியாட்டுக்கு வந்திருக்கிறாயே, நீ மடையன் – என்கிறாள் தலைவி. நாடன் கடவுள் வாழும் சுனை என்று ஒதுக்கப்பட்டுள்ள சுனையில் இலைகளைத் தள்ளிவிட்டுப் பூத்திருக்கும் குவளை மலரையும், குருதி நிறத்தில் மலையில் பூத்திருக்கும் காந்தள் மலரையும் சேர்த்துக் கட்டி அணிந்துகொண்டு சூர்மகள் அடுவாள். மலையடுக்கத்துக்கு அழகு செய்யும் அருவியின் முழக்க இசைக்கேற்ப ஆடுவாள். இப்படிச் சூர்மகள் ஆடும் நாடன் அவன். வேலன் (முருகன் வந்தேறி நிற்கும் சாமியாடி) கருநிறம் கொண்ட கடப்பம்பூ மாலை அணிந்துகொண்டு சாமி ஆடுபவன். நோய் நாடன் என் மார்பை அணைந்தான். என் நெஞ்சு அவனிடம் படர்கிறது. அவன் நினைவுதான் அவள் நோய்.