• Fri. Apr 26th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 5, 2022

நற்றிணைப் பாடல் 35:

பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய்
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?- மகிழ்ந்தோர்
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?- இவள் கண் பசந்ததுவே!
பாடியவர் அம்மூவனார்
திணை நெய்தல்
பொருள்:
அலை பொங்கி வரும் கடல். கரையில் நாவல் மரத்தின் கரிய நாவல்பழம் காம்பு இற்றுப்போனதால் வீழ்ந்தது. அந்தக் கணியைக் கண்ட வண்டு, அது தம்முடைய இனம் என்று எண்ணி அதை மொய்த்து நிற்கிறது. அங்கு ஒரு ஞெண்டு (நண்டு) அந்த வண்டை நாவல்பழம் என்று எண்ணி, அதைப் பிடித்துக்கொண்டது. நண்டின் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள முடியாமல் யாழோசைப் போல ஒலித்துக்கொண்டே வண்டு அல்லல்படுகிறது. இந்த சண்டையைக் கேட்டு அங்கு ஒரு நாரை வந்தது. அந்த நாரையிடமிருந்து தப்பித்துக்கொள்ள நண்டு வண்டை விட்டுவிட்டது.
இப்படியான கடற்கரை மணலில், மாந்தையின் எழில்நலம் போல நலம் பெற்றவள் தலைவி. இப்படிப்பட்ட தலைவியை விட்டு விலகாதிரு. சிறிது விலகினாலும் அவளது அழகு கெட்டுவிடும். கள்ளுண்டவர்க்கு கள் இல்லையெனில் அவர் கொள்ளும் துன்பம்போன்றது அத்துன்பம் என்று சொல்லலாம்? இனியும் பிரியாதிருந்து அருள்வாய்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *