

நற்றிணைப் பாடல் 33:
படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,
கல்லுடைப் படுவில் கலுழி தந்து,
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில்,
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை,
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல்
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?’ என
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி,
நல் அக வன முலைக் கரை சேர்பு
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே.
பாடியவர் இளவேட்டனார்
திணை பாலை

பொருள்:
அந்த மலையில் பொழுது மறைந்துவிட்டது. மலையில் இருக்கும் ஊர் சிறுகுடியில் மாலை நேரம். தனிமையில் இருந்தவர்கள் மன்றத்தில் ஒன்றுகூடுவர். கல்லுக் குழியிலிருந்து கலங்கல் நீரைக் கொண்டுவருவர். வயிறு நிறைய உண்ண உணவில்லாமல் குறையாக இரவு-உணவு உண்பர். குறி தவறாமல் அம்பு எய்யும் திறம் கொண்ட அந்த மறவர் காவிநிற ஆடை அணிந்து வழிப்பறி செய்ய வழியில் காத்துக்கொண்டு நிற்பர். இப்படி அச்சம் தரும் வழியில் அவர் செல்ல நினைத்தால் நம்மால் மறுக்கமுடியுமா? நாமோ மென்மையானவர்கள். எனச் சொல்லி விம்மிக்கொண்டே என் முகத்தை அவள் பார்த்தாள். அவளது கண்ணீர் ஆறாகப் பாய்ந்தது. நான் என்ன செய்வேன் – இப்படித் தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

