


நற்றிணைப்பாடல்:002
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!
பாடியவர்:பெரும்பதுமனார் திணை : பாலை
பொருளுரை:
சுரமோ, ஆழ்ந்துபடக் கிடந்த பெரிய குளிர்ச்சியையுடைய குன்றத்து; தழைத்த வலிய ஈத்த மரங்களையுடைய காற்றுச் சுழன்று வீசும் காட்டின் கண்ணே; நெறிகொண்டு செல்லும் மக்களுடைய தலையை மோதியதனாலே குருதி படிந்த சிவந்த மாறுபட்ட தலையையுடையனவும்; இரத்தம் பூசிய வாயையுடையனவுமாகிய பெரிய தலையையுடைய புலிக்குட்டிகள்; இம் மாலைப் பொழுதில் தாம் பதுங்கியிருக்கும் மரலின் தூஊகளை நிமிர்ந்து நோக்கா நிற்கும் இண்டங் கொடியுடனே ஒருசேரப் படர்கின்ற ஈங்கையையுடையவாகும், இத்தகைய சுரத்தின்கண்ணே; கூரிய பற்களையுடைய மெல்லியளாகிய மடந்தையை முன்னே செல்லவிடுத்துப் பின்னே; இவ்விராப் பொழுதிற் செல்லா நிற்கும். இவ்விளைஞனுள்ளமானது; காலொடுபட்ட மாரி மால்வரை மிளிர்க்கும்; காற்றொடு கலந்த மழை பெய்யுங் காலத்திற் பெரிய துறுகற்களைப் புரண்டு விழுமாறு மோதுகின்ற இடியினுங்காட்டிற் கொடியதா யிராநின்றது;


