



மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட் டாகும்
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.
பாடியவர்: நெய்தற் கார்க்கியர்.

பாடலின் பின்னணி:
களவொழுக்கம் நீடிப்பதைத் தலைவி விரும்பவில்லை. அவள் விரைவில் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறாள். திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்யாததைக் கண்டு தலைவி மிகவும் வருந்துகிறாள். தலைவியின் துயரத்தைக் கண்ட தோழியும் வருந்துகிறாள். தலைவியைக் காணவந்த தலைவன் மறைவான ஓரிடத்தில் இருக்கிறான். அவன் வந்திருப்பது தோழிக்குத் தெரியும். “விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறாள். திருமணத்திற்கான காலம் நீடிப்பதால் தலைவி மிகவும் வருந்துகிறாள், இந்நிலையில் அவள் இந்த ஊரில் அதிக நாட்கள் வாழமாட்டாள்.” என்று தலைவனுக்குக் கேட்குமாறு தோழி கூறுகிறாள்.
பாடலின் பொருள்:
கரிய உப்பங்கழியில் உள்ள நீலமணி போன்ற நெய்தல் மலர்கள் கூம்பும் மாலை நேரத்தில், தூய அலைகளிடத்திலிருந்து பொங்கிவரும் நீர்த்துளிகளோடு பொருந்திய மேகத்தோடுகூடிய வாடைக்காற்று தங்கள் காதலர்களைப் பிரிந்தவர்கள் செயலறுமாறு வீசுகிறது. இத்தகைய துன்பங்களைத் தரும் இந்தச் சிறிய நல்ல ஊரில், இன்னும் சிலநாட்களே வாழமுடியும்.

