• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byதரணி

Sep 6, 2024

நற்றிணைப்பாடல்: 393

நெடுங் கழை நிவந்த நிழல் படு சிலம்பின்
கடுஞ் சூல் வயப்பிடி கன்று ஈன்று உயங்க,
பால் ஆர் பசும் புனிறு தீரிய, களி சிறந்து,
வாலா வேழம் வணர் குரல் கவர்தலின்,
கானவன் எறிந்த கடுஞ் செலல் ஞெகிழி                                                                                          வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி,
நிலை கிளர் மீனின், தோன்றும் நாடன்
இரவின் வரூஉம் இடும்பை நாம் உய,
வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப,
நமர் கொடை நேர்ந்தனர்ஆயின், அவருடன்                                                                                 நேர்வர்கொல் வாழி - தோழி! - நம் காதலர்
புதுவர் ஆகிய வரவும், நின்
வதுவை நாண் ஒடுக்கமும் காணுங்காலே?

பாடியவர்:கோவூர் கிழார்
திணை:குறிஞ்சி

பொருள்:

தோழீ! வாழ்வாயாக! நீண்ட மூங்கிலுயர்ந்த நிழல் மிக்க மலையில்; முதிர்ந்த சூலினையுடைய வலிய பிடியானை தான் கன்றையீன்று வருந்தாநிற்ப; பால் மடி சுரந்த பசிய ஈன்ற அணிமையினாலுண்டாகிய பசிநோயைத் தீர்க்க வேண்டி; மகிழ்ச்சி மிக்குக் கரிய களிற்றியானை வளைந்த தினைக்கதிரைக்கொய்து கொண்டு போதலாலே; கானவன் கண்டு எறிந்த விரைந்த செலவினையுடைய எரி கொள்ளி; மூங்கில் நிரம்பிய மலைப்பக்க மெங்கும் விளங்கும்படி மின்னி; விசும்பினிடத்தில் நிலை பெற்றிராது தோன்றி மறைகின்ற மின்னலைப்போலத் தோன்றாநிற்கும் மலை நாட்டினராகிய நம் காதலர்; இரவில் வருதலாலாகிய துன்பத்தினின்று நாம் பிழைக்கவேண்டி; அவர் புதியராய் வரும் வருகையும் நின் வதுவைக்காக நீ நாணி ஒடுங்கியிருக்கும் ஒடுக்கமுங் கண்டக்கால்; அந்தணர் சான்றோரை முன்னிட்டு அருங்கலந் தந்து வரைவதற்கு வந்த வாய்மொழிக்கு ஏற்குமாறு; நம் சுற்றத்தார் மகட்கொடைக்கு உடன்படுவர் போலும், அங்ஙனம் உடன்படுவாராயின்; அவர்தாம் நம் காதலரொடு மகிழ்ந்து பேசுவரோ? நேர்ந்து பேசுவரெனின் அது மிக்க நன்மையாகுங் காண்;