• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Mar 31, 2024

நற்றிணைப்பாடல் 352:

இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,
அழல் போல் செவிய சேவல் ஆட்டி,
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து,
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் மாண்புடைக் குறுமகள் நீங்கி,
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!

பாடியவர்: மதுரைப் பள்ளிமருதங்கிழார் மகனார் சொகுத்தனார் திணை: பாலை

பொருள்:

இலைவடிவாகிய மாட்சிமைப்பட்ட அம்பை வில்லிலே மாண்புபட இருத்திய உயிர்களிடத்து அன்பில்லாத மறவர்; கொன்று அலைத்தலாலே; அயல் நாட்டினர் பலரும் அவ்விடத்தில் இறந்து கிடந்த செல்லுதற்கரிய சுரத்திலுள்ள கவர்த்த நெறியில் அங்ஙனம் கிடந்த பிணங்களை; அழல் போலுகின்ற சிவந்த செவியையுடைய கழுகின் சேவல் தின்னாவாறு அதனை வெருட்டி அலைத்து; தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடுகின்ற ஊனைத் தின்னுதலில் விருப்ப மிக்க முதிய நரி; பசிய தசையை நிரம்பத் தின்று வாய் வறந்து நீர் பருக விரும்பிப் பேய்த்தேர் விளங்குகின்ற நீரற்ற வறும் புலத்தை நீர் உள்ள இடமென்று சென்று அலைந்து; நீர் ஆங்குக் கிடைக்காமையாலே வருந்திக் கற்குவியலின் நிழலிலேதான் வெயிலுக்கு ஒதுங்கியிருக்கவும் இடம்பெறாது வருந்துகின்ற அஞ்சத்தக்க பலவாய வழி; வருதலானே வருந்திய நமக்கும் கடத்தற்கு அரிய வாயின; இத்தன்மையவாகிய வழியில் மூங்கில் போன்ற தோளையுடைய மாட்சிமைப்பட்ட இளமடந்தையாகிய நம் காதலி தானிருக்கும் மாளிகையினின்று நீங்கி எவ்வாறு வந்தனளோ? அளியள் இவள் இரங்கத் தக்காள் காண்.