• Fri. May 17th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Apr 1, 2024

நற்றிணைப்பாடல் 353:

ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த
நுணங்கு நுண் பனுவல் போல, கணம் கொள,
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை,
முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
கல் கெழு குறவர் காதல் மடமகள் கரு விரல் மந்திக்கு வரு விருந்து அயரும்,
வான் தோய் வெற்ப! சான்றோய்அல்லை – எம்
காமம் கனிவதுஆயினும், யாமத்து
இரும் புலி தொலைத்த பெருங் கை யானை
வெஞ் சின உருமின் உரறும் அஞ்சுவரு சிறு நெறி வருதலானே.

பாடியவர்: கபிலர் திணை:

பொருள்:

தேட்டத்திற்குரிய காதலன் இல்லாத தாபதமகளிர் தாம் தேடி உண்ணுமாறு முயன்று நூற்கின்ற நுணங்கிய நுண்ணிய பஞ்சுபோல; கூட்டமாகக் காற்றால் அலையப்படும் மேகந் தவழ்கின்ற கொடுமுடிகள் உயர்ந்த நெடிய மலையிடத்து; முடப்பட்டு முதிர்ந்த பலாமரத்திலுள்ள குடம் போன்ற பெரிய பழத்தின் சுளையை; மலைச்சாரலில் உழுதுண்டு வாழுங் குறவர் தாம் அன்போடு பெற்று வளர்த்து வருகின்ற இளமகள்; கரிய விரலையுடைய மந்தியை வருவிருந்தாக ஏற்றுக்கொண்டு கொடுத்து ஓம்பாநிற்கும்; விசும்பில் நீண்ட மலைநாடனே! எம்பால் நீ காமம் மிகுதியாகக் கொண்டிருப்பினும்; இரவு நடுயாமத்துக் கரிய புலியைக் கொன்ற பெரிய கையையுடைய யானை கொடிய சினத்தையுடைய இடிபோல முழங்கா நிற்கும்; யாவரும் அஞ்சுகின்ற சிறிய கொடிய வழியின் வருதலானே; நீ சால்புடையையல்லை; ஆதலின் இங்ஙனம் நீ வருதலை நீக்கி வேறு தக்கதொன்றனைச் செய்வாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *