• Fri. Jan 24th, 2025

இலக்கியம்:

Byவிஷா

Mar 10, 2024

நற்றிணைப்பாடல் 337:

உலகம் படைத்த காலை – தலைவ!
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே
முதிரா வேனில் எதிரிய அதிரல்,
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ திணை : பாலை

பொருள்:

தலைவனே! முற்றாத இளவேனிற் காலத்தை எதிர்நோக்கிய காட்டுமல்லிகை மலரையும் பருத்த அடியையுடைய பாதிரியின் குறுகிய நுண்ணிய மயிரையுடைய சிறந்த மலரையும்; நறிய செங்கருங்காலி மலரையுங் கொய்து ஒருசேர உள்ளே செறித்திருந்த; பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போன்ற நறுமணம் ஒருங்கே அமையப்பெற்று அழகிய நல்ல நிறம் பொருந்திய; நீலமணி போன்ற ஐந்துபகுதியாக முடித்தற்குரிய சரிந்து விழுகின்ற; வண்டுகள் மெல்ல ஒலித்தலையுடைய நறிய கூந்தலினுடைய; அருமையாகப் பெறுகின்ற பெரிய பயனைக் கொள்ளாது; பிரிந்து உறைகின்ற பகுதியையுடைய பெரிய பொருளீட்டி வாழ்வோர்; இவ்வுலகத்தைப் படைத்தகாலம் முதற்கொண்டு அடைந்தாரைப் பாதுகாக்க வேண்டுமென்று அவ்வண்ணமே நிகழ்ந்து வரும் அறநெறியை மறந்துவிட்டனரோ? அங்ஙனம் மறந்த தகுதிப் பாட்டினையுடையோர் சிறந்தோரேயாவார்.