• Mon. Jan 26th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Nov 17, 2023

நற்றிணைப் பாடல் 302:
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும், நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
தாஅம் தேரலர் கொல்லோ சேய் நாட்டு,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே?

பாடியவர் : மதுரை மருதன் இளநாகனார்
திணை : பாலை

பொருள்:

 அணிகலன் பூண்ட மகளிர் ஆவல் கொள்ளுமாறு கொன்றை மலர் கொத்துக் கொத்தாகப் பூத்துக் காடே அழகு பெற்றுத் திகழ்கிறது. பெய்த மழைக்குப் பின்னர் 

பெய்யப்போகும் மழையை எதிர்கொள்வது போல் தெறுழ் மலர் நரைத்த வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாகப் பூக்கிறது. இவற்றையெல்லாம் அவர் நினைத்துப் பார்க்கவில்லை போலும். களிற்றியானை காலால் உதைத்த நிலப் புழுதியானது, சோற்றுப்பகுதி இல்லாமல் வயிரம் பாய்ந்த வேலமரம் இருக்கும் வழியை மறைக்கும் காட்டு வழியில் அவர் சென்றிருக்கிறார்.
பூக்கும் கார்காலம் வந்துவிட்டதே, திரும்பவேண்டுமே, என்று அவருக்கு நினைவு வரவில்லை போலும் இவ்வாறு தலைவி தோழியிடம் சொல்கிறாள்.