• Sat. May 4th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Nov 18, 2023

நற்றிணைப் பாடல் 303:

ஒலி அவிந்து அடங்கி, யாமம் நள்ளென,
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,
”துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம்வயின் வருந்தும், நன்னுதல்” என்பது
உண்டுகொல்? வாழி, தோழி! தெண் கடல்
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி,
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.

பாடியவர் : மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார் பாடல்.
மதுரையில் வாழ்ந்தவர். ஆர் என்னும் ஆத்திமரம் மிகுயாக உலவியிருந்த ஆலம்பேரி என்னும் ஊரின் குடிமகன்.

திணை : நெய்தல்

பொருள் :

 ஆரவாரம் மிக்க ஊராகிய பாக்கம் ஒலி அடங்கி யாமத்தில் ‘நள்’ என்னும் அமைதி ஒலியுடன் தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும். ஊர் மன்றத்துப் பனைமரத்தின் 

அடியில் கடவுள் சிலைகள் இருக்கும். அந்தப் பனைமரத்தில் இருந்துகொண்டு ஆண், பெண் அன்றில் பறவைகள் பேசிக்கொள்ளும் ‘உயவு’க் குரல் கேட்கும். அந்தக் குரல் கேட்கும்போதெல்லாம் கண்ணுறங்காமல் இருக்கும் அவள் துயரம் மேலிட்டு வருந்துவாள்.
அப்படி வருந்தும் நன்னுதல் ஒருத்தி தனக்காக இருக்கிறாள் என்று எண்ணிப் பார்க்காமல் என் சேர்ப்பன் இருக்கிறான். தோழி, கேள். வலிமையான கையை உடைய பரதவர் கடலுக்குள் சென்று தம் செம்மைத்திறம் கொண்ட குத்துக்கோலை எறியும் போது வளைத்து முடிந்திருக்கும் அவர்களின் வலையை அறுத்துக்கொண்டு சுறாமீன் ஓடும். இப்படிச் சுறாமீன் ஓடும் கடல்-சேர்ப்பு நிலத்தை உடையவன் அவன். அவன் நெஞ்சில் என் துயரம் தோன்றவில்லை. தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுவதைத் தொலைவில் கேட்டுக்கொண்டிருக்கும் தலைவன், தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்பது தலைவியின் விருப்பமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *