• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Oct 4, 2023

நற்றிணைப் பாடல் 263:

பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்
இறை வரை நில்லா வளையும், மறையாது
ஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டு
உரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,
கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,
கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்
மெல்லம் புலம்பற் கண்டு, நிலைசெல்லாக்
கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு,
உரைத்த தோழி! உண்கண் நீரே.

பாடியவர் : இளவெயினனார்
திணை : நெய்தல்

பொருள் :
யாழ! உன் நெற்றியானது பிறை போன்ற உருவ அழகை இழந்துவிட்டது. வளையல்கள் மணிக்கட்டுகளைக் கடந்து ஓடுகின்றன. இவற்றை மறைத்தாலும் ஊர் மக்கள் அலர் தூற்றுகின்றனர். நாணத்தை விட்டுவிட்டு இவற்றை அவரிடம் நீயோ, நானோ சொல்லவில்லை. கருவுற்றிருக்கும் பெண்நாரை பறந்து செல்ல முடியாமல் கடல் மீனை உண்ணும் ஆசையோடு வயலிலேயே இருக்கும்போது, வளைந்த கழுத்தினை உடைய முதிர்ந்த அதன் ஆண்நாரை கடல் மீனைக் கொண்டுவந்து கருவுற்றிருக்கும் தன் பெண்நாரைக்குக் கொடுக்கும் உன் மென்னிலப் புலம்பனைக் கண்டு நிலைமை விளங்கும்படி எடுத்துச் சொல்லாமல் நீ மறைக்கிறாய். நானும் மறைக்கிறேன். என்றாலும் உன் கண்ணீர் அவருக்குச் சொல்கிறதே! தோழி தலைவியிடம் இவ்வாறு சொல்லும்போது தலைவன் தொலைவில் கேட்டுக்கொண்டிருக்கிறான். அவன் தலைவியை மணந்துகொள்ள வேண்டும் என்பது கருத்து.

யாழ – அன்புள்ளோரை விளிக்கும் பண்டைய சொல், யாழ் போன்று பேசுபவளே எனலும் ஆம்