நற்றிணைப் பாடல் 262:
தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,
ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,
உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,
நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,
துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும்
பணைத் தோள், அரும்பிய சுணங்கின், கணைக் கால்,
குவளை நாறும் கூந்தல், தேமொழி
இவளின் தீர்ந்தும், ஆள்வினை வலிப்ப,
”பிரிவல்” நெஞ்சு, என்னும்ஆயின்,
அரிது மன்றம்ம, இன்மையது இளிவே.
பாடியவர் : பெருந்தலைச் சாத்தனார்
திணை : பாலை
பொருள்:
ஈர நிலத்தில் கருவிளைப் பூ கண்ணைப் போல் பூக்கும். ஆடும் மயிலைப் போல அது வாடைக் காற்றில் ஆடும். உறை பனியால் ஊர் உறங்கும் யாமத்தில் உடல் அழகு கெட்டுக் காதல் பிணியில் மனம் நொந்து பிரிந்து சென்றவரை நினைத்துக்கொண்டு இவள் வருந்திக்கொண்டிருக்கிறாள். சுணங்கு அரும்பி அழகுடன் திகழும் இவள் தோளும், பருத்த காம்புகளை உடைய குவளைப் பூ மணக்கும் கூந்தலும், தேன் போன்ற பேச்சும் கொண்ட இவளைப், பிரிந்து பொருள் “தேடும் ஆள்வினைக்கு இவளைப் பிரிவேன்” என்று என் நெஞ்சம் கூறுமாயின், பொருள் இல்லாமல் வறுமையுற்றிருக்கும் இல்லாமையாகிய இழிவின் தாக்கம் எத்தகையது என்பதை உணர்ந்துகொள்வது உண்மையிலேயே அரிய ஒரு செய்திதான். இவ்வாறு தலைவன் நெஞ்சைத் தானே கடிந்துகொள்கிறான்.