• Mon. Dec 9th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Oct 6, 2023

நற்றிணைப் பாடல் 264:

பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர ஏகுதி – மடந்தை! – எல்லின்று பொழுதே:
வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த
ஆ பூண் தெண் மணி இயம்பும்,
ஈகாண் தோன்றும், எம் சிறு நல் ஊரே.

பாடியவர் : ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
திணை : பாலை

பொருள் :

மடந்தாய்! ஞாயிறு மேலைத்திசையிலே சென்று ஒளி மழுங்கியது: வேய்பயில் இறும்பின் ஆ பூண் கோவலர் யாத்த தௌமணி இயம்பும் மூங்கில் நிறைந்த சிறிய மலையின் கண்ணே பசுவினிரை பூண்ட கோவலராலே கட்டப்பட்ட தெளிந்த ஓசையையுடைய மணி ஒலியா நிற்கும்; எமது சிறிய நல்லவூர் தோன்றாநின்றது, உவ்விடத்தே பாராய்! பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்பு வான் தளி பொழிந்த காண்பின் காலை பாம்பு அளையினுள்ளே செறிந்திருக்குமாறு முழங்கி வலமாக எழுந்து மேகம் மழை பொழிந்த காட்சியையுடைய காலைப் பொழுதிலே; அழகு விளங்கிய கலாபத்தை வியப்புடையதாக விரித்து ஆடுகின்ற நீலமணி போன்ற பிடரியை உடைய மயில்போல; மலர் சூடிய நின் கூந்தல் வீசுகின்ற காற்று உளரி விரித்துவிடச் சிறிது விரைந்து செல்வாயாக!